மகாகனி மரம்

          மகாகனி மரத்தின் விஞ்ஞானிப் பெயர் ( Swietenia Macrophylla ) ஸ்வியிடினியா மேக்ரோபில்லா ஆகும். இது மிலியேசி தாவரக் குடும்பத்தை சார்ந்தது. ஆலந்து நாட்டில் கி.பி. 1700-1772 வரை வாழ்ந்த ஜி.வி.ஸ்வியிடென் என்பவரது நினைவாக முற்பெயரும், அரவாக் இந்தியர்களிடையே நிலவிய இம்மரத்தின் பெயரை இரண்டாவது பெயராகவும் இணைத்து ஸ்வியிடின்யா மகாகனி என பெயரிடப்பட்டுள்ளது.
            இம்மரத்தின் தாயகம் மேற்கிந்தியத் தீவுகளாகும். கி.பி. 1795 ஆம் ஆண்டில் ஜமைக்காவிலிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியாரால் கன்றுகள் பெறப்பட்டு, கொல்கத்தா தாவரயியல் தோட்டத்தில் முதல் முறையாக வளர்க்கப்பட்டன. மீண்டும் 1865 ஆம் வருடத்தில் ஜமைக்காவிலிருந்து விதை பெற்று சென்னை அக்ரி-ஹார்டிகல்சர் சொசைடியில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டது. சுமார் 1280 விதைகள் விதைத்ததில் 550 செடிகள் உற்பத்தி செய்து 423 செடிகள் எல்லா மாவட்டங்களுக்கும், மாவட்ட வனத்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி, அரசு நிலங்களில் பயிரிடப்பட்டன. அந்த மரங்களே இப்போது பல மாவட்டங்களில் காணப்படுகின்றன.
            குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கல்லணை பகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தடிக்காரன் கோணம் வனச்சோதனை சாவடியிலும், குற்றாலம் வன ஓய்வுவிடுதி பகுதிகளிலும் இன்னும் இந்த மரங்கள் நல்ல வளர்ச்சியுடன் காணப்படுகிறது. சென்னை அடையாறு தியசாபிகல் சொசைச்டியிலுள்ள மரம் மிகவும் கம்பீரமாக காணப்படுகிறது. புதுக்கோட்டை கோர்ட் வளாகத்திலும் ஒரு மரம் காணப்படுகிறது.
                மேலும் திருச்சி மாவட்டம் பச்சமலையில் டாப் செங்காட்டுப்பட்டி வனஓய்வு விடுதியின் அருகில் நூற்றுக்கணக்கான மரங்கள் நடப்பட்டு ஓங்கி வளர்ந்து காணப்படுகிறது.

விதை சேகரிப்பு :
                  இம்மரம் ஏப்ரல் மாதத்தில் பூ பூக்கிறது. இந்தபூக்கள் பச்சை சாயலையுடைய மஞ்சள் நிறமானவை. இந்த மரத்தின் கனி நீள உருண்டை வடிவத்தில் கட்டையை போன்று தோடுடையதாக இருக்கும். இந்த காய்கள் வானத்தை நோக்கியிருக்கும், இவை 7 செ.மீ. X 5.5 செ.மீ. அளவுடையவை. இந்த விதையின் உள்பகுதியில் 5 அறை இருக்கும். அவைகளின் இயற்கையுடன் கூடிய விதைகள் இருக்கும். விதைகனி நெற்று வெடித்து விதைகள் சிதறி பறக்கும். முதிர்ந்த கனி நெற்றுகளில் இருந்து விதைகளை நேரடியாகவும் சேகரம் செய்யலாம். ஒரு கிலோ எடையில் 3350-3500 விதைகள் இருக்கும்.

நாற்றங்கால் :
                 
10 மீட்டர் நீளம் 1 மீட்டர் அகலம் 15 செ.மீ. உயரமுள்ள தாய்பாத்தியில் விதைகளை பரப்பி முளைக்க செய்யலாம், அல்லது நேரடியாக 16X30 செ.மீ பாலிதீன் பைகளில் விதைகளை ஊன்றியும் நாற்றங்கால் உற்பத்தி செய்யலாம். விதை முளைப்புத்திறன் 40% ஆகும்.





நடவு முறை :
                     ஆறு மாதம் வரை வளர்ந்த மரக்கன்றுகளை பையிலுள்ள தாய்மண் உடையால் குழியின் நடுவில் நேராக சேதமின்றி நடவு செய்யலாம். இம்மரம் ஆழமான மண் கண்டமும் நல்ல வடிகால் திறனும் உள்ள பகுதிகளில் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் நல்ல நீர் செழிப்புள்ள வளமான மண்ணுள்ள மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை அருகாமையில் உள்ள வளமான நிலங்களிலும் வளர்க்கலாம். 4மீ X 4மீ இடைவெளியில் 60செ.மீ X 60செ.மீ X 60செ.மீ குழிகளில் செடிகளை நடவு செய்யலாம். செடிகளை நடவு செய்யும் பொழுது 1 கிலோ மக்கிய தொழுஉரம் அல்லது 1/2 கிலோ கோழி உரம் இடுவது சிறந்தது. இம்மரங்களை மழைக்காலங்களில் நடவு செய்தால் நன்றாக வளரும். 
                   கோடை காலங்களில் குறிப்பாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதுத்துளிர் விட்டு பசுமையாக வளரும். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுவது நல்லது. சொட்டு நீர்பாசன முறையிலும் வளர்க்கலாம். முதல் ஆண்டிலேயே சுமார் 10 அடி உயரம் வளரும் தன்மையுடையது.




மரத்தின் பயன்கள் :
                    இம்மரத்தை எல்லா வேலைபாடுகளுக்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக மேஜை, நாற்காலிகள், சட்டமிட்ட கதவுகள், அலமாரி மற்றும் கடைசல் வேலைப்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம். இசைக்கருவிகள், விமானத்தின் ஒட்டு பலகைகள், பென்சில் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

மகசூல :
              மரத்தை நடவு செய்து சுமார் 30-40 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம்.

மருத்துவ பயன்கள் :
                    இந்த மரத்தின் பட்டைகள் சிங்கோனா மரப்பட்டை போன்று மருத்துவ பயன்கொண்டது. மேற்கிந்திய தீவுகிளல் மலேரியா காய்ச்சலுக்கு இம்மரப்பட்டையை உபயோகிக்கின்றனர். இம்மரப்பட்டைகள் 15% அளவில் டானின் உள்ளது. இது தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

வெளியீடு :
தமிழ்நாடு அரசு வனத்துறை
வனவியல் விரிவாக்கப் பிரிவு 
சென்னை - 600 048.